அண்டை நாடான சீன தேசம்

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,

புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் ‘ரஜோலி’ என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.

பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் ‘நவநாயகர்‘ என்றும் கூறலாம்.

போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.

போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.

அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
1. போகர் – 12,000.
2. சப்த காண்டம் – 7000.
3. போகர் நிகண்டு – 1700.
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.

அற்புதங்களின் மொத்த உருவமாகத் திகழ்ந்த போகர், மிகுந்த அறிவாற்றலும் தவ ஆற்றலும் உடையவராய் இருந்தபோதும் அளவற்ற பணிவோடு வாழ்ந்தார் என்பதையும் அவரது சரிதம் தெரிவிக்கிறது.           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *