சித்தர்கள் காய கற்பம்

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு திறந்தவெளியாகவே விளங்கியது

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.

துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர்.

திடுக்கிட்ட போகரிடம், நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.

அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.

ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, ‘அமிர்தமணிப்பழம்’ என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய ‘பசி, தாகம், மூப்பு’ என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் ‘போகர் ஏழாயிரம்’, போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.
அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும் கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

       …………..தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *