நான் என்கிற இந்த உடம்பு நானல்ல

நான் என்கிற இந்த உடம்பு நானல்ல. என் உயிரே அந்த நானாக முடியும். ஆனால் அந்த நான் என்ற ஜீவன் அல்லது சிவன் குடியிருக்கும் இடமே , அதாவது என் உடலே அதன் கோயில். நமது ஆலயங்களின் அமைப்பும் மேற்கே அல்லது தெற்கே தலை வைத்து கிழக்கே அல்லது வடக்கே கால் நீட்டும் ஒரு மனித உடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உயிரே கடவுள் என்றும் அந்தச் ஜீவனே சிவனாக பிறள்வடைந்தததோ என்று தோன்றுகிறது. அதாவது தலை மூலஸ்தானமாக அப்படியே கோயிலும் அகன்று செல்கிறது. உள்ளம் பெரும் கோயில் ஊண் உடம்பு ஆலையமா?

இந்தச் ஜீவனிடம் இருப்பதே அறிவு. அறிவின் விளைவு சலனம். சலனத்தின் விளைவு செயல் அல்லது இயக்கம் இந்த இயக்கத்திற்கு வேண்டிய சக்தியும் சிவமாகிய ஜீவனிற்கு கிடைத்தாயிற்று. இந்தச் ஜீவனிடம் இருந்து உயிர் நீங்கினால் எஞ்சுவது சவமா? சவத்திற்கு உயிராகிய விசிறியைப் போட்டால் மீண்டும் சிவமா? ஆகா! அப்படியானல் நான் என்ற எனது உயிர் தான்…..

உயிர் தான் கடவுளா? அதாவது ஜீவன் அல்லது சிவன் என்பது நானே.

அறிவு வெறும் ஐம்புலன்களிற்கு உட்பட்ட அறிவாக அல்லாமல் ஞானமாக விரிந்து மேலும் பரி பூரணம் அடைந்தால் அது தான் பரமார்த்த நிலையா?

கடவுளை இனங் காண்பது இவ்வளவு இலகுவானதா?

ஆனால் நான் தான் கடவுளடா என்பதில் உள்ள அந்த நான் என்பது யார்? அது உடலும் அல்ல அதனோடு இணைந்த உயிரே. ஆனால் அந்த உயிர் என்ற கடவுள் வாழ உடல் என்ற ஆலயம் தேவை. அதை சுத்தமாகவும் புனிதமாகவும் பேண வேண்டும். காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்பதன் பொருள் உடல் அல்ல உயிரே கடவுள் என்பதை வலியுறுத்த எழுந்த முது மொழியே ஒழிய அதன்தேவை பயன்பாட்டை குறைத்து மதிப்பிட அல்ல.

உடல் உயிரற்றதாயின் பலனற்றது அழியக் கூடியது என்ற நிலைமையை அதாவது உயிரின்றி உடலிருக்க இயலாது என்பதைக் காட்டவே ஒழிய வேறில்லை. அப்படியானால் கடவுளைத் தேடுவது என்பது ஜீவனை அதாவது சிவனை உயிரைத் தேடுவதேயாகும். அந்த உயிர் நமது உடலிற்குள் இருக்கும் போது நாம் கடவுளை வெளியே தேடுவது மடமை அல்லவா? கடந்து உள்ளே உள்ளவனே கடவுள். வேற்று உயிர்கள் உள்ளவா என்று மதியையும் கடந்து செவ்வாயிலும் தேடலாம். ஆனால் கடவுளைத் தேட வேண்டுமாயின் நாம் நமது பார்வைகளை உள் நோக்கி நமது அகத்தை நோக்கி திருப்ப வேண்டும்.

இங்கு சுத்தமாக இருக்க வேண்டியது உடல் என்றால் புனிதமாக இருக்க வேண்டியது உள்ளம். உள்ளத்தை புனித மாக வைத்திருப்பது என்பது எண்ணங்களைக் கூட தர்மத்திற்கு இசைவாக நியாயத்தின் நியமத்தில் வைத்துக் கொள்வதேயாகும். இதனையே அநேகமாக எல்லா மதங்களும் போதிக்க முயல்கின்றன. உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. இதனையே உடலும் உள்ளமும் நலந்தானா என்ற கண்ணதாசன் வரிகள் காட்டுகின்றன.

உடலை சூக்குமமான உயிரில் பொருத்தும் அற்ப்புதமான அதினுட்பமான கலைதான் சாகா கலை எனும் உயிர் கலை. உடலில் உயிர் இருப்பதாக எண்ணுதலே மாயை. உண்மையில் உயிரில் தான் உடல் நிற்கிறது. உயிரில் உடலை பொருத்தி விட்டால் அந்த சரீரம் வீழாது. அனைத்து நோய்களில் இருந்தும் விடுதலை.

உயிரே கடவுள்..அஹம் பிரம்மாஸ்மி
அருட்பெரும் உயிரே தனி பெரும் கருணை…

#SSTSUA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *