மோட்சம்

உயிர் தியானம் என்பது மனதை உறங்க வைத்துவிட்டு அறிவை செயல்படுத்தல்தான், அப்படி மனம் உறங்கும்போது அறிவு உயிரை தொடர்பு கொள்கிறது, உயிர் தியானத்தால் ஒன்றுக்குள் ஒன்று ஒவ்வொன்றாக ஒடுங்கி அப்படியே உயிராகிறது. மொட்டு எப்படி மலர்ந்ததோ அப்படியே சுருங்கி மீண்டும் மொட்டாகிறது.

ஊண் உடலில் உள்ள உயிரணுக்கள் அனைத்தும் உயிர் உடலை சென்றடைவதே மோட்சம்.உயிருடலை உயிரணுக்கள் சென்றடைந்தவுடன் ஊண் தேகம் உயிர் தேகமாக மாற்றம் பெறுகிறது.அதுவே கல்ப்ப தேகம், நோய்கள் நீங்கிய நிலை. எலும்பு மஜ்ஜை ஜோதிநிறம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களே ஜோதியாக மாறுகிறது, அந்நிலை ஒளி தேக நிலை.

மனம் அசைகிறது, மானுடம் அசைகிறது.அதுவே அசையா நிலைக்கு வரும்போது ஞானமாகிறது. ஞானத்தில் மனம் அடங்கும்போது உயிராகிறது. நீயே கடவுளாகிறாய், அதுவே முக்தி மோட்சம். உன் பொருளை நீஅடைவதற்கு மதம் எதற்கு மார்க்கம் எதற்கு? மெய் குரு மட்டுமே போதும்.

மனிதன் தனது பாப கணக்குகளை பார்த்து பார்த்து அவைகளை எல்லாம் தீர்த்துவிட்டு, பின்பு புண்ணிய லோகம் செல்ல நினைத்து புண்ணியங்களைசெய்து சரி செய்து முடிப்பதற்குள், காலன் வந்து சொல்லாமல் கொள்ளாமல் அவன் கணக்கை முடித்துக் கொண்டு சென்று விடுகிறான்.

தீர்வு? திருவடி ஞானம்….

நம் அண்டம் எனும் பிண்டத்தில் திருவடி எதுவென குரு முகமாக அறிய வேண்டும்
உயிர் உணவு உயிர் வாழ்க்கை என எப்போதும் உயிர் கவனத்தில் வாழ பழகி கொண்டால் நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறி போவோம். உயிராகும் கலையே மரணத்தை வெல்லும் உயிர் கலை. நம்மை படைத்த கடவுளை நம்மால் கற்பனையில் கூட உருவாக்க இயலாது.மனிதனுக்கு புதியதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.அவனது புதிய படைப்புகளில் மயங்கி அவன் மெய் பொருளை மெய் கடவுளான உயிரை மறந்து விட்டான்.மெய் பொருளை மறைத்த புதிய உருவங்கள், அதுவே மாயை.

நம்மால் படைக்கப்பட்டவைகளை நாம்தான் காக்க வேண்டும். நம்மை படைத்தவனால் மட்டுமே நம்மை காக்க முடியும்.

சரியான திட்டமிட்ட அறிவு அறிவுக்கு கட்டுப்பட்ட மனம், மனதுக்கு கட்டுப்பட்ட சரீரம் ஆக இருப்போரை இவ்வுலகம் வணங்கும், அவரே ஞானி. உன்னை நீ சரீரமாக பாவிக்காது உன்னை எப்போதும் உயிராக பாவிக்கவேண்டும், உடலை விட்டு கவனத்தை உயிரில் நிறுத்த வேண்டும்.

உன் கவனம் உயிராக மாறவேண்டும். அதுவே மனம் அசைவற்ற பரவச நிலை. பின் கவனத்தை உயிராக மாற்றினால் உயிருக்கு கவனம் ஏற்ப்படும். உன் உடலை நீ கவனிக்கும் வரை உயிர் உடலை கவனிக்காது.
உயிரை நீ கவனித்தால் உயிர் உடலை தன கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதுவே நோய் எனும் சரீர சாபத்தில் இருந்து விடுபடும் உயிர் கலையின் முதல் நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *